Saturday, January 5, 2008

கோடி கோடியாய்.....

மகா கஞ்சனான குருபாதம் என்ற கோடீஸ்வரன் ஒருவன் இருந்தான். கஞ்சன் என்றால் கம்பளிப் போர்வையில்கூட வடிகட்டின கஞ்சன் அல்ல இவன். பாலித்தீன் தாளில் வடிகட்டின கஞ்சன். கடவுள் (குபேரனிடம் கடன்பட்டது போல் இவனிடமும் கடன் வாங்கியிருப்பாரோ!) இவனிடம் எக்கச்சக்க செல்வத்தைக் கொடுத்துவிட்டு இவனது மனதைப் பூட்டிச் சாவியை எடுத்துச் சென்றுவிட்டார் (வங்கி லாக்கர் போல்.)

கஞ்சன் குருபாதத்தின் வீட்டுக் கதவு எப்பொழுதும் பூட்டியோதான் இருக்கும். திறந்து வைத்தால் ‘யாராவது உதவி கேட்டு வந்து விடுவார்களோ!’ என்ற பயம்தான். ஒரு சன்னல் கதவை மட்டும் சிறிதாக திறந்து வைத்திருப்பான்..

உதவி என்ற வார்த்தை அவனது அகராதியில் கிடையாது. பசி என்பது தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் மட்டுமே உரிய ஒன்று என்று நினைத்தான். சிறு குழந்தைகளிடம்கூட இரக்கம் காட்டமாட்டான். இவனுக்கு எப்படியாவது பாடம் புகட்ட வேண்டும் என்று பலர் நினைத்தனர்.

அதே ஊரில் சோமையா என்று ஒருவன் இருந்தான். அவன் தனது மூளைக்கு சர்ப் போட்டு சலவை செய்து சாணம் தீட்டியதில் அவனது மூளையில் ஆயிரம் அல்ல லட்சம் கோடி கோடியாய் மின் மினிப் பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன.

நாள் பார்த்து, கிழமை பார்த்து, நல்ல நேரம் பார்த்து ஒரு நாள் சோமையா குருபாதத்தைச் சந்திக்கச் சென்றான். சோமையா தன் வீட்டை நோக்கி வருவதை சன்னல் வழியாகப் பார்த்த குருபாதம் “அட இவன் எதற்கு இங்கு வருகிறான். ஏதாவது உதவி கேட்பானோ! எது கேட்டாலும் இல்லை என்று சொல்லிவிட வேண்டும்’ என்று நினைத்தான்.

சோமையா வீட்டின் வாசற் படிக்கட்டை மிதிக்கும் முன்பு “சோமையா என்னிடம் எதுவுமேயில்லை. உனக்கு நான் எந்த உதவியும் செய்ய முடியாது. நீ போகலாம்.” என்றான்.

“நான் உன்னிடம் உதவி கேட்டு வரவில்லை. உன்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது. உன்னளவு இல்லாவிட்டாலும் என்னிடமும் சிறிது பணம் இருக்கிறது. நாம் இருவரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வோமே!”

“ஒப்பந்தமா! எப்படி?”

“அதாவது நான் உனக்கு தினமும் ஒரு லட்சம் ரூபாய் வீதம் முப்பது நாட்களுக்கு உனக்குப் பணம் தருகிறேன். பதிலுக்கு நீயும் எனக்கு ஒரு தொகையைத் தர வேண்டும். பெரியதாக ஒன்றும் கேட்கவில்லை.”

“நான் எவ்வளவு உனக்குத் தர வேண்டிய பணம் எவ்வளவு?”

“முதல் நாள் நான் கொடுக்கும் ஒரு லட்சத்திற்குப் பதிலாக நீ எனக்கு ஒரு பைசா தந்தால் போதும்.”

குருபாதத்திற்கு வியப்புத் தாங்கவில்லை. ‘இவனுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது. ஒரு வேளை இவன் பொடுப்பது கள்ள நோட்டுகளாக இருக்குமோ!’ என்று நினைத்தான். “சோமையா நீ நல்ல மனநிலையில்தானே இருக்கிறாய்? நீ கொடுப்பது நல்ல நோட்டுக்கள்தானே!”

“நான் மிகவும் தெளிவான மனநிலையில்தான் இருக்கிறேன். நான் கொடுக்கும் அத்தனை பணமும் அரசு வெளியிட்ட அக்மார்க் நோட்டுக்கள் என்று காந்தியே சொல்லிவிடுவார். சரி ஒபப்ந்தத்திற்கு வருவோம். இரண்டாம் நாள் நான் கொடுக்கும் ஒரு லட்சத்திற்குப் பதிலாக நீ எனக்கு இரண்டு பைசா தரவேண்டும். மூன்றாம் நாள் நான்கு பைசாவும் நான்காம் நாள் எட்டு பைசாவும் இப்படியாக தினமும் நீ முந்தின நாள் கொடுத்த பணத்தின் இருமடங்காக முப்பது நாட்களும் திருப்பித் தர வேண்டும்.”

‘சரியான மாங்கானா இருப்பான் போலிருக்கிறதே! சரி நமக்கு முப்பது லட்சம் சுலபான வழியில் வரப் போகிறது. நாம் இவனுக்கு சிறு தொகையைத் தானே பதிலுக்குக் கொடுக்கப் போகிறோம்’ என்று மகிழ்ந்த குருபாதம் சோமையாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டான்.

“குருபாதா எந்த சூழ்நிலையிலும் இறுதிவரை ஒப்பந்தத்தை மீறக்கூடாது.”
‘நான் என்ன உன்னைப் போல் இளித்த வாயானா! வாசல் கதவு தட்டாமல் கூரையைப் பிய்க்காமல் வரும் பணத்தை வேண்டாம் என்று சொல்வதற்கு.’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, “கடவுள் மீது ஆணையாக மீற மாட்டேன்.” என்றான்.

‘லட்சம் லட்சமா பணம் வரப்போகுது….’ என்று பாட ஆரம்பித்தான்.

சோமையாவோ ‘கோடி கோடியாய்ப் பணம் வரப் போகுது…’ என்று பாடினான்.

மறு நாள் சோமையா கொண்டுவரும் பணத்திற்காக சன்னல் கதவுகளை சற்று அகலத் திறந்து வைத்துக் கொண்டு காத்திருந்தான் குருபாதம். சோமையா வந்தான். சொன்னதுபோல் ஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்துவிட்டு குருபாத்திடமிருந்து ஒரு பைசாவைப் பெற்றுக் கொண்டு திரும்பினான்.

இரண்டாம் நாள் ஒரு லட்சம் கொடுத்துவிட்டு இரண்டு பைசாவும் முண்றாம் நாள் நான்கு பைசாவும் இப்படியாகத் தினமும் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டு குருபாத்திடம் முந்தின நாள் அவன் கொடுத்த பணத்தின் இருமடங்கான பணத்தைப் பெற்றுக் கொண்டு சென்றான்.

குருபாத்திற்குத் தூக்கமே வரவில்லை. எப்பொழுது விடியும் சோமையா எப்பொழுது பணத்தைக் கொண்டு வந்து கொடுப்பான் என்று காத்திருக்க ஆரம்பித்தான். சோமையா மறுநாள் வராமல் போய்விடுவானோ என்று பயந்து வாசல் கதவுகளைத் திறந்து வைத்தான்.

பத்து நாட்களில் குருபாதம் பெற்றுக் கொண்டது பத்து லட்சம். ஆனால் அவன் சோமையாவிற்குத் திருப்பித் தந்தது
0.01 + 0.02 + 0.04 + 0.08 + 0.16 + 0.32 + 0.64 + 1.28 + 2.56 + 5.12 = 10.43 ரூபாய்
பதினோறாவது நாள் 10.24

பன்னிரெண்டாவது நாள் 20.48
பதின் மூன்றாவது நாள் 40.96
பதினான்காவது நாள் 81.92
பதினைந்தாவது நாள் 163.84
பதினாறாவது நாள் 327.68
பதினேழாவது நாள் 655.36
பதினெட்டாவது நாள் 1310.72
பத்தொன்பதாவது நாள் 2621.44
இருபதாவது நாள் 5242.88
இருபத்து ஒன்றாவது நாள் 10,485.76
இருபத்து இரண்டாவது நாள் 20,971.52
இருபத்து மூன்றாவது நாள் 41,943.04
இருபத்து நான்காவது நாள் 83,886.08
இருபத்து ஐந்தாவது நாள் 1,67,772.16
இருபத்து ஆறாவது நாள் 3,35,544.32
இருபத்து ஏழாவது நாள் 6,71,088.64
இருபத்து எட்டாவது நாள் 13,42,177.28
இருபத்து ஒன்பதாவது நாள் 26,84,354.56
முப்பதாவது நாள் 53,68,709.12

இறுதியாக முப்பது நாள்களும் குருபாதம் சோமையாவிடம் பெற்றுக் கொண்ட பணம் முப்பது லட்சம். ஆனால் அவன் சோமையாவுக்குத் திருப்பிக் கொடுத்தது எவ்வளவு தெரியுமா?

1,07,37,418.23

அதாவது ஒரு கோடியே ஏழு லட்சத்து முப்பத்து ஏழாயிரத்தி நானூற்று பதினெட்டு ரூபாய் இருபத்து மூன்று பைசா.

நீங்கள் விடையைச் சரியாகக் கண்டுபிடித்திருந்தால் உங்கள் கால்குலேட்டர் சரியாக வேலை செய்கிறது என்று ஒரு சபாஷ் போட்டுக் கொள்ளுங்கள்.

ஒரு பைசா இரண்டு பைசா என்ற அற்பத் தொகைதானே என்று குருபாதம் நினைத்தது அசுரத் தொகையாக மாறியது. இருபதாவது நாள் நள்ளிரவில் குருபாதத்தைவிட்டு குரு விலகி சோமையாவிடம் தஞ்சம் புக ஆரம்பித்து விட்டார். கோடி ரூபாய்க்குமேல் சோமையாவிற்குக் கொடுத்த குருபாதத்தின் வீட்டுக் கதவுகள் அதன்பின்பு மூடவேயில்லை.

இது மாதிரியான சோமையாக்கள் யாராவது இருந்தால் எச்சரிக்கையாக இருங்கள். அவர்களை குருபாதம் போன்றவர்களின் விலாசத்தைக் கொடுத்துவிட்டு நீங்கள் விலகிவிடுங்கள்.

‘வாழும் காலம் வரை தேவையான செல்வம் போதும்’ என்ற மனம் இருந்தால் இறக்கும் காலத்தில் இதயத்தில் சுமையிருக்காது.

கனிஷ்கா, தென்காசி.